வடபகுதி மாணவர்களுக்கான சீருடை கல்வி உபகரணம் அனுப்பிவைப்பு

வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து வவுனியா நலன்புரிக் கிராமங்களில் தங்கியுள்ள பாடசாலை மாணவர்களுக்கான சீருடை, கல்வி உபகரணங்கள் உள்ளிட்ட 130 மில்லியன் ரூபா பெறுமதியான பொருட்கள் நேற்று அரசாங்கத்தினால் வவுனியாவுக்கு அனுப்பிவைக்க ப்பட்டன. கல்வியமைச்சிலிருந்து நேற்றுக் காலை 19 லொறிகளில் இப்பொருட்கள் எடுத்துச் செல்லப்பட்டதுடன் கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த உத்தியோக பூர்வமாக இதனை உரிய அதிகாரிகளிடம் கையளித்தார்.

ஒன்றரை கோடி ரூபா பெறுமதியுடைய மாணவ மாணவிகளுக்கான தற்காலிகச் சீருடை, மூன்றரை கோடி ரூபா பெறுமதியான மேசை, கதிரை உள்ளிட்ட கல்வி உபகரணங்களும் 75 மில்லியன் ரூபா பெறுமதியான நூல்கள், அப்பியாசப் புத்தகங்களும் இதிலடங்குவதாகக் கல்வியமைச்சர் சுசில் பிரேம ஜயந்த தெரிவித்தார்.

கல்வியமைச்சில் நேற்று இடம்பெற்ற இந்நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர் , முதற்கட்டமாக கல்வியமைச்சினால் 19 லொறிகளில் வடக்கில் இடம்பெயர்ந்த மாணவர்களுக்கான பொருட்கள் அனுப்பப்படுகின்றன எனவும் தெரிவித்தார்.

இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை தேவையான உபகரணங்களை நலன்புரி நிலையங்களுக்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகளைக் கல்வியமைச்சு மேற்கொண்டுள்ளது எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

வவுனியாவிற்குக் கொண்டு செல்லப்படும் தற்காலிக சீருடைகள் நலன்புரி நிலையங்களிலுள்ள மாணவர்களுக்கு நேரடியாகப் பகிர்ந்தளிக்கப்படுவதுடன் அங்குள்ள ஆசிரியைகளுக்கு வழங்குவதற்காக, 2,000 சேலைகளும் எடுத்துச் செல்லப்படுவதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் பிரதியமைச்சர் எம். சச்சிதானந்தன் உட்பட கல்வித்துறை சார்ந்த அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர். நேற்று எடுத்துச் செல்லப்பட்ட கல்வி உபகரணங்கள் நாளை மறுதினம் 5ம் திகதி அங்கு பகிர்ந்தளிக்கப்படவுள்ளன.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply