ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்கும் முயற்சியில் பின்னடைவு : அமைச்சர் தகவல்
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த நடுக்காட்டுப்பட்டியை சேர்ந்த பிரிட்டோ-கலாமேரி தம்பதியரின் 2 வயது குழந்தையான சுர்ஜித் வில்சன் நேற்று மாலை வீட்டின் அருகே உள்ள நிலத்தில் நடந்துசென்றபோது, ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்தான்.
பயன்பாடின்றி இருந்த அந்த ஆழ்துளை கிணற்றை மூடும் வகையில், மேல்மட்டம் வரை மண்ணை கொட்டியிருந்த நிலையில், தொடர்ந்து மழை பெய்ததால் ஆழ்துளை கிணற்றை மூடியிருந்த மண் கீழே இறங்கியதாக தெரிகிறது.
குழந்தையை மீட்கும் பணியில் போலீசார், தீயணைப்பு துறையினர் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு உதவியாக குழந்தையை மீட்கும் பல்வேறு மீட்பு குழுவினரும் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இது ஒருபுறம் இருக்க, குழந்தைக்கு மூச்சுத்திணறாமல் இருக்க ஆழ்துளை கிணற்றுக்குள் தொடர்ந்து ஆக்சிஜன் செலுத்தப்பட்டது. மேலும் அந்த குழிக்குள் கண்காணிப்பு கேமரா பொருத்தி, குழந்தையை கண்காணித்தனர். குழந்தை சுவாசிப்பது அவ்வப்போது உறுதி செய்யப்பட்டது.
ஆழ்துறை கிணற்றின் அருகே பக்கவாட்டில் குழிதோண்டி குழந்தையை மீட்க முடிவு செய்தனர். ஆனால் குறிப்பிட்ட அடிக்கு மேல் பாறை இருந்ததால், தோண்டும்போது ஆழ்துளை கிணற்றில் கடும் அதிர்வு அதிர்வு ஏற்படும் என்பதால் அந்த முயற்சி நிறுத்திவைக்கப்பட்டது.
குழந்தையை பத்திரமாக மீட்கும் நோக்கில் முதலில் குழந்தையின் ஒரு கையில் கயிறு மூலம் சுறுக்கு போடப்பட்டது. மேலும் மற்றொரு கையில் கயிறு மூலம் சுறுக்கு போட முற்பட்டபோது அது பலன் அளிக்கவில்லை. மீண்டும் அம்முயற்சியை மேற்கொண்ட நிலையில் அக்குழந்தை பத்திரமாக மீட்க அனைத்து விதமான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன.
கிணற்றில் விழுந்தபோது சுமார் 25 அடி ஆழத்தில் சிக்கியிருந்த குழந்தை, மீட்பு பணியின்போது 70 அடி ஆழத்திற்கு சென்றுவிட்டது. இதனால் மீட்புப் பணி கடும் சவாலாக இருந்தது.
இன்று காலை மீட்பு பணியின்போது ஆழ்துளை கிணற்றின் பக்கவாட்டில் இருந்து மண் சரிந்து விழுந்துள்ளது. இதனால், குழந்தையை வெளியே எடுப்பதற்கான முயற்சியில் பின்னடைவு ஏற்பட்டது. அதேசமயம், குறிப்பிட்ட ஆழத்திற்கு கீழ், ஆழ்துளை கிணற்றின் விட்டம் குறைவாக இருந்ததால், மீட்புக் கருவியை தொடர்ந்து செலுத்த முடியாத நிலை ஏற்பட்டது. கயிறு கட்டி வெளியே எடுக்கும் முயற்சியும் அடுத்தடுத்து தோல்வியடைந்தது. 15 மணி நேரம் போராடியும், குழந்தையை மீட்கும் முயற்சிக்கு பலன் கிடைக்காததால் அனைவரின் முகங்களும் வாடிவிட்டன.
சம்பவ இடத்தில் இருந்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, குழந்தை சுர்ஜித்தின் சத்தத்தை தற்போது எங்களால் கேட்க முடியாதது கவலையளிக்கிறது என்றார்.
“ஆழ்துளை கிணற்றில் மண் விழுந்ததால் மீட்புப்பணியில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இருப்பினும், குழந்தையை பத்திரமாக மீட்டுவிடுவோம் என்ற நம்பிக்கை உள்ளது. மீட்பு குழுவினரும் தீவிரமாக முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். குழந்தை மூர்ச்சையாகி மீட்கப்பட்டாலும், உயிர்பிழைக்க வைக்க அனைத்து மருத்துவ வசதிகளும் இங்கு தயார் நிலையில் உள்ளன” என்றார் அமைச்சர் விஜயபாஸ்கர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply