அரசியல் தீர்வை விரைவில் முன்வைக்க அரசு நடவடிக்கை: சமரசிங்க

மக்களுக்குத் தேவையான அரசியல் தீர்வை மிக விரைவாக முன்வைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக இடர் முகாமைத்துவ மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க ஜெனீவாவில் தெரிவித்துள்ளார். என்றாலும், அந்தத் தீர்வு வேறு நாடுகளால் முன் மொழியப்பட்டதாக இருக்காது என்றும் அமைச்சர் திட்டவட்டமாக சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜெனிவாவில் நேற்று  நடைபெற்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 11 வது அமர்வில் இலங்கையின் நிலைவரங்களை விளக்கி அமைச்சர் சமரசிங்க உரை நிகழ்த்தினார். இதன்போது, புலிகளின் பிடியிலிருந்து மக்களை விடுவிப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட மனிதாபிமான நடவடிக்கை பற்றியும், தற்போது மேற் கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் மனித உரிமை பேரவையில் விளக்கியுள்ளார்.

‘நாட்டின் ஏனைய பகுதி மக்கள் அநுபவிக்கும் உரிமைகளை வடபகுதி மக்களுக்கும் பெற்றுக்கொடுக்க வேண்டுமென ஜனாதிபதி தெரிவித்துள்ளார். எனவே, அவர்களுக்கான அரசியல் தீர்வை உலகில் எந்த நாடும், அரசாங்கமும் கொண்டுவராத வேகத்தில் முன்வைக்க வேண்டும். ஆனால் அது இறக்குமதி செய்யப்பட்டதாக இருக்காது. வேறு நாடுகளின் தீர்வு யோசனைகளை ஆராய்ந்துகொண்டிருப்பதற்கு எமக்கு நேரமில்லை.

எனவே, எமது நாட்டுக்கே உரிய ஒரு தீர்வையே நாம் காணவேண்டும். அது அனைத்து மக்களாலும் ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இருக்க வேண்டும். இந்தத் தீர்வுக்காக நாம் சர்வதேச சமூகத்தின் ஆதரவினை எதிர்பார்க்கின்றோம்; மாறாக இடையூறுகளை அல்ல, உலகம் வெற்றிகொள்ள முடியாத சவால்களை நாம் வெற்றிகொண்டிருக்கும் வேளையில், தீர்வொன்றைக் காண்பதற்கு எமக்கு முடியாது என சர்வதேச சமூகம் சந்தேகிக்கின்றதா? இல்லை. எமக்கு இதைச் செய்ய முடியும்’ என்றும் அமைச்சர் சமரசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply