சிறுவன் சுர்ஜித்தை மீட்க 2-வது ரிக் இயந்திரத்தின் மூலம் குழி தோண்டும் பணி தொடக்கம்
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் உள்ள வீட்டின் தோட்டத்தில் விளையாடிக்கொண்டிருந்த 2 வயது குழந்தை சுர்ஜித் ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்தான். அவனை மீட்கும் பணிகள் சுமார் 53 மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்று வருகிறது. நேற்று காலையில் இருந்து ரிக் இயந்திரத்தின் மூலம் பக்கவாட்டில் குழி தோண்டும் பணி தொடங்கியது.
ரிக் இயந்திரத்தின் மூலம் 100 அடி வரை குழி தோண்டும் முயற்சிகள் தொடர்கின்றன. ஒரு ஆள் இறங்குமளவுக்கு ஒரு மீட்டர் அகலத்தில் இந்த குழி தோண்டப்பட்டு வருகிறது. குழந்தையை மீட்க ரிக் இயந்திரத்தால் இதுவரை 35 அடி ஆழத்துக்கு குழி தோண்டப்பட்டுள்ளது. குழியில் பாறைகள் உள்ளதால் அவற்றை தோண்டும் பணியில் சற்று தொய்வு ஏற்பட்டது. இதனை சரி செய்யும் நோக்கில் ராமநாதபுரத்திலிருந்து மிகவும் அதிக திறன் கொண்ட 2வது ரிக் இயந்திரம் வரவழைக்கப்பட்டது. தொடர்ந்து 2வது ரிக் இயந்திரத்தில் ட்ரில் கருவிகள் பொருத்தும் பணி வேகமாக நடைபெற்றது.
இதனிடையே சிறுவன் சுர்ஜித் மீட்புப்பணியை பார்வையிட துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் சம்பவ இடத்திற்கு வந்தார். அவரிடம் நடைபெற்று வரும் மீட்பு பணி குறித்து அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கி கூறினார். தொடர்ந்து துணை முதல்வர் சிறுவன் சுர்ஜித் பெற்றோர்க்கு நேரில் ஆறுதல் தெரிவித்தார். துணை முதல்வருடன் தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் வந்தார்.
ஊழியர்களின் கடின முயற்சியில் 2வது ரிக் இயந்திரத்தில் ட்ரில் கருவி பொறுத்தும் பணி நிறைவடைந்த நிலையில் 35 அடி ஆழத்தில் இருந்து குழி தோண்டும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது. 35 அடி ஆழத்திற்கு கீழே மண் மட்டும் இருந்தால் இரவுக்குள் பணி முடிய வாய்ப்பு இருப்பதாகவும், 35 அடி ஆழத்திற்கு கீழே பாறை இருந்தால் காலையிலும் பணி தொடர வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த முயற்சியின் மூலம் சிறுவன் சுர்ஜித் பத்திரமாக மீட்கபடுவான் என்ற நம்பிக்கை அனைவர் மத்தியிலும் எழுந்துள்ளது.
கருவி ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த சிறுவன் சுர்ஜித் பத்திரமாக மீட்க பட வேண்டும் என பொதுமக்கள் தொடர்ந்து பல்வேறு இடங்களில் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply