அமெரிக்காவில் செக்ஸ் புகார்களில் சிக்கிய பெண் எம்.பி. ராஜினாமா

அமெரிக்காவில் கடந்த ஆண்டு நடந்த நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபை தேர்தலில் கலிபோர்னியா மாகாணத்தின் 25-வது மாவட்டத்தில் இருந்து ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர், பெண் எம்.பி. கேட்டி ஹில் (வயது 32).

ஜனாதிபதி டிரம்ப் மீது ஈர்ப்பு கொண்ட பழமைவாத சமூக வலைத்தளமான ‘ரெட் ஸ்டேட்’, கேட்டி ஹில்லும், அவரது கணவரும் ஹில்லின் தேர்தல் பிரசாரத்தில் பணியாற்றிய 20 வயது கடந்த பெண் ஊழியர் ஒருவருடன் செக்ஸ் உறவில் ஈடுபட்டதாக இந்த மாத தொடக்கத்தில் செய்தி வெளியிட்டது.

ஹில்லும், அந்த பெண் ஊழியரும் நெருக்கமாக இருந்த படத்தையும் அந்த சமூக வலைத்தளம் வெளியிட்டது.

அதைத் தொடர்ந்து கேட்டி ஹில், தனது நாடாளுமன்ற இயக்குனரான கிரகாம் கெல்லியுடன் செக்ஸ் உறவு வைத்திருந்தார் என அந்த சமூக வலைத்தளம் செய்தி வெளியிட்டது.

இந்த புகார்கள் வந்ததைத் தொடர்ந்து, தனக்கும், கிரகாம் கெல்லிக்கும் இடையே செக்ஸ் உறவு இருந்தது இல்லை என்று கேட்டி ஹில் மறுத்தார். அதே நேரத்தில் தனது தேர்தல் பிரசாரத்தில் பணியாற்றிய ஊழியருடன் உறவு வைத்திருந்தது உண்மைதான் என ஒப்புக்கொண்டார்.

மேலும் ‘ரெட் ஸ்டேட்’டில் வெளியான படங்கள் தனது அனுமதியின்றி வெளியிடப்பட்ட படங்கள் என்றும், அந்த படங்கள் வெளியானதற்கு தற்போது விவாகரத்து செய்ய இருக்கும் தனது கணவர் ஹெஸ்லப்தான் பொறுப்பு என்றும் கேட்டி ஹில் குறிப்பிட்டார்.

என்னை அவமானப்படுத்தும் முயற்சியில் ஹெஸ்லப் உறுதியாக உள்ளதாக தெரிகிறது எனவும் கூறினார்.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் ஊழியர்களுடன் செக்ஸ் உறவு வைத்துக்கொள்வது தொடர்பாக நாடாளுமன்றம் வகுத்துள்ள நெறிமுறைகளுக்கு எதிரானது, கேட்டி ஹில்லின் செயல் என்று ‘வாஷிங்டன் போஸ்ட்’ நாளிதழ் குறிப்பிட்டது.

கேட்டி ஹில்லுக்கும், அவரது நாடாளுமன்ற இயக்குனர் கிரகாம் கெல்லிக்கும் இடையே இருந்ததாக கூறப்படும் செக்ஸ் உறவு பற்றி விசாரிக்கப்படும் என நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபையின் நெறிமுறைகள் குழு விசாரணை நடத்தப்போவதாக அறிவித்தது.

இது தொடர்பாக அந்த குழு கூறுகையில், “கேட்டி ஹில், தனது நாடாளுமன்ற இயக்குனருடன் உறவு வைத்துக்கொண்டுள்ளதாக பொது வெளியில் எழுந்துள்ள புகார்கள் பற்றி நாங்கள் அறிவோம். தனது நாடாளுமன்ற இயக்குனருடன் அவர் செக்ஸ் உறவு வைத்துக்கொண்டிருக்கக்கூடும். இது பற்றி நாங்கள் விசாரிக்கிறோம்” என்று குறிப்பிட்டது.

இந்த நிலையில், தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை கேட்டி ஹில் ராஜினாமா செய்துள்ளார். அதில் அவர், “உடைந்து போன உள்ளத்தோடு எனது ராஜினாமாவை நான் அறிவிக்கிறேன். இது நான் செய்தாக வேண்டிய கடினமான காரியம். ஆனால் இது எனது வாக்காளர்களுக்கும், சமூகத்துக்கும், நாட்டுக்கும் செய்யக்கூடிய மிகச்சிறந்த காரியம் என்று நான் நம்புகிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.

தனது செயலுக்காக அவர் மன்னிப்பும் கேட்டுள்ளார். இந்த விவகாரம் அமெரிக்க அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply