எமது பிரச்சினைகளை கேட்கவோ தீர்க்கவோ தயாரில்லாதவர்களுக்கு நாம் ஆதரவு வழங்க வேண்டுமா?:எம்.கே. சிவாஜிலிங்கம்
தமிழ் மக்களின் பிரச்சினைகள், தேவைகள், தீர்வுகள் குறித்துப் பேசுவதற்குக் கூட தயாரில்லாத சஜித் பிரேமதாச, கோட்டாபய ராஜபக்ஷ போன்ற தரப்பினர்களுக்கு தமிழ் மக்கள் ஏன் வாக்களிக்க வேண்டும் என அனைவரும் சிந்தித்துப் பார்க்க வேண்டும் எனத் தெரிவித்திருக்கும் ஜனாதிபதி வேட்பாளர் எம்.கே. சிவாஜிலிங்கம் 5 தமிழ் கட்சிகளும் ஒருமித்த முடிவை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
சமகால அரசியல் நிலைமைகள் தொடர்பில் யாழ். பாடி விருந்தினர் விடுதியில் நேற்று (29) நடாத்திய ஊடக சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் பிரதான வேட்பாளர்களான கோட்டாபய ராஜபக்ஷ, சஜித் பிரேமதாசவோ தமிழ் மக்களின் கோரிக்கைகளை ஏற்றுக் கொள்வதற்கு தயாரில்லாத நிலையில் அவர்களுக்கு ஏன் தமிழ் மக்கள் ஆதரவை வழங்க வேண்டும்.
அவர்கள் தங்களை தீவிர சிங்கள தேசியவாதிகளாகக் காட்டி தெற்கிலுள்ள மக்களின் வாக்குகளை அபகரிப்பதற்காக இனவாதத் தீயை பரப்பி வருகின்றனர்.
அவ்வாறு தெற்கில் இனவாதம் கக்குகின்ற இந்தத் தரப்பினர் தான் வடக்கிற்கு வந்து தங்களை ஆதரிக்குமாறு கேட்கின்றனர். குறிப்பாக எமது பிரச்சினைகளைக் கேட்கவோ அல்லது தீர்த்து வைக்கவோ தயாரில்லாத இந்த வேட்பாளர்களுக்கு நாம் ஏன் ஆதரவை வழங்க வேண்டும்.
தெற்கில் உள்ளவர்களின் செயற்பாடுகளையும் அவர்களின் சிந்தனைகளையும் புரிந்து கொண்டு சிந்தித்து செயற்பட வேண்டும். எங்கள் மீதான அடக்கு முறைகள் ஒடுக்குமுறைகளைப் பிரயோகித்தவர்கள், எங்கள் நிலங்களைப் பறித்தவர்கள், எங்கள் இடங்களில் பௌத்த ஆக்கிரமிப்பை மேற்கொள்பவர்கள் என அவர்களது செயற்பாடுகள் தொடர்கின்றன.
இதற்கான நீதியும் கிடைக்கவில்லை. இத்தகைய செயற்பாடுகளை தடுத்து நிறுத்தவும் முடியவில்லை. இவ்வாறான நிலையில் இவர்களுக்கு நாம் ஏன் வாக்களிக்க வேண்டும் என்பதை ஒவ்வொரு தமிழ் மகனும் சிந்தித்துப் பார்க்க வேண்டும். அதே நேரத்தில் இதனைச் செய்கின்ற அல்லது செய்வதர்கள் தான் இன்றைக்கு எம்மிடம் வந்து வாக்கு கேட்கின்றனர்.
ஆகவே, இவர்களுக்கு நாம் ஆதரவை வழங்கி வாக்களிப்பதில் எந்தப் பயனும் இல்லை. ஆகையினால் தமிழ் மக்களின் உரிமைக் குரலை வெளிப்படுத்தி தமிழ் மக்களின் பிரச்சினைகளை சர்வதேசத்திற்கு எடுத்துக் காட்டும் வகையில் நான் தேர்தலில் போட்டியிடுகின்றேன்.
அவ்வாறு நான் போட்டியிட்டாலும் தமிழ் மக்களின் குறிப்பாக 5 கட்சிகளும் முன்வைக்கும் கோரிக்கைகளை ஏற்றால் போட்டியிலிருந்த விலகிகக் கொள்ளத் தயார் என்று அறிவித்திருந்தேன். ஆனால் இன்றைக்கு அதற்கான தேவை இல்லை. ஏனெனில் இந்தக் கட்சிகளது கோரிக்கைகளை அவர்கள் யாரும் ஏற்றுக் கொள்ளவில்லை. அவர்களது தேர்தல் விஞ்ஞாபனங்களிலும் தமிழ் மக்களுக்காக எதுவும் இல்லை.
இவ்வாறான நிலையில் ஜனாதிபதி தேர்தலில் பொது இணக்கப்பாட்டின் அடிப்படையில் ஒன்றிணைந்த 5 தமிழ்த் தேசியக் கட்சிகளும் ஒருமித்த முடிவை எடுக்க வேண்டும் என தமிழ் மக்கள் எதிர்பார்த்துள்ளனர். ஆனால், அவர்கள் அனைவரும் இன்று புதன்கிழமை நடைபெறுகின்ற கூட்டத்தில் ஒருமித்த முடிவை எடுப்பார்களா என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது.
ஏனெனில் அவர்களது 13 கோரிக்கைகளையும் பிரதான வேட்பாளர்கள் நிராகரித்துள்ள நிலையில் அந்தத் தரப்பினருக்கு ஆதரவளிக்க முடியாது என்பதால் இத் தேர்தலை பகிஷ்கரிக்க வேண்டும் அல்லது விரும்பியவர்களுக்கு வாக்களிக்குமாறு கூற வேண்டும். அவ்வாறு விரும்பியவர்களுக்கு வாக்களிப்பு என்றால் அது எனக்கான ஆதரவாகவே பார்க்கின்றேன். ஆகவே, தமிழ் மக்களின் உரிமைக் குரலை வெளிப்படுத்தி நீதியைக் கோருகின்ற எனக்கு அனைவரும் வாக்களிக்க வேண்டுமெனக் கோருகின்றேன் எனவும் எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply