13 மில்லியன் ரூபாவுடன் தமிழீழ வைப்பக முகாமையாளர் கைது
கிளிநொச்சியில் செயற்பட்டு வந்த தமிமீழ வைப்பகத்தின் முகாமையாளர் 13 மில்லியன் ரூபா நிதியுடன் கைது செய்யப்பட்டிருப்பதாக இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர். இந்த நிதியினை வைப்பாளர்களிடம் ஒப்படைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் இராணுவத்தினர் கூறியுள்ளனர். வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து வவுனியாவுக்கு வந்த மக்களுடன் மக்களாக ஈழம் வங்கியின் முகாமையாளரும் வெளியேறி முகாமொன்றில் தங்கியிருப்பதாக கட்டுமான மற்றும் பொறியியல்த்துறை அமைச்சர் டாக்டர்.ராஜித சேனாரட்ன கூறினார்.
அதேநேரம், அரசாங்க வங்கிகளின் நடமாடும் சேவைகள் நலன்புரி நிலையங்களில் செயற்பட்டுவருவதாகக் குறிப்பிட்ட அமைச்சர், இடம்பெயர்ந்த மக்களில் பலர் தமது பணத்தினை அந்த வங்கிகளில் வைப்பிலிட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.
“இடம்பெயர்ந்தவர்களில் ஒருவர் மாத்திரம் 40 மில்லியன் ரூபா வைப்பிலிட்டார்” என அமைச்சர் சுட்டிக்காட்டினார். வவுனியாவிலுள்ள நலன்புரி நிலையங்களுக்கு விஜயம் மேற்கொண்டு அங்குள்ள நிலைமைகளை ஆராய்ந்திருந்த அமைச்சர், நலன்புரி நிலையங்களின் நிலைமை திருப்தியளிக்கும் வகையில் அமைந்திருந்ததாகக் கூறினார்.
எனினும், இடம்பெயர்ந்திருக்கும் மக்கள் தங்கியிருக்கும் முகாம்களில் சுகாதார வசதிகளில் முன்னேற்றம் காணப்படவேண்டும் எனக் குறிப்பிட்டார்.
“சின்னமுத்து, வைரஸ் காய்ச்சல்கள் போன்ற நோய்கள் பரவிவருகின்றன. எனினும், நிலைமை கட்டுப்பாட்டிலேயே உள்ளது. வவுனியாவுக்கு மேலதிகமான வைத்தியர்களை அனுப்பிவைக்கவேண்டிய நிலை காணப்படுகிறது” என அமைச்சர் கூறினார்.
அதேநேரம், இடம்பெயர்ந்த மக்களுக்கான உலருணவுப் பொருள்களை விநியோகிப்பதில் பல பிரதேச செயலாளர்கள் மோசடிகளில் ஈடுபடுவதாகக் குறிப்பிட்ட அமைச்சர் ராஜித சேனாரட்ன, இவ்வாறான மோசடிகள் எதிர்காலத்தில் அதிகரிப்பதைத் தடுக்கத் தொடர்ந்தும் இராணுவத்தினரின் நிர்வாகமே இருக்கும் எனக் கூறினார். “கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவிலிருந்து இடம்பெயர்ந்த பிரதேச செயலாளர்கள் நலன்புரி நிலையங்களில் தமது பணிகளை ஆரம்பித்துள்ளனர். சிலர் மோசடிகளில் ஈடுபடுகின்றனர்” என்றார் அவர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply