பதவி நீக்க விசாரணையில் ஆஜராக டிரம்ப் மறுப்பு : அடிப்படை நேர்மை இல்லையென குற்றச்சாட்டு
அமெரிக்காவில் அடுத்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெறும் ஜனாதிபதி தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி டிரம்ப்பை எதிர்த்து, ஜனநாயக கட்சியை சேர்ந்த முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பிடென் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழலில் உக்ரைன் நாட்டில் ஜோ பிடென் மற்றும் அவரது மகன் ஹன்டார் நடத்தி வரும் தொழில் தொடர்பாக அவர்கள் மீது விசாரணை நடத்த அந்த நாட்டு அதிபர் விளாடிமிர் ஜெலென்ஸ்கிக்கு ஜனாதிபதி டிரம்ப் நெருக்கடி கொடுத்ததாக புகார் எழுந்தது.
இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதை தொடர்ந்து, டிரம்ப் தனது பதவியை தவறாக பயன்படுத்தியதாகவும், இன்னொரு நாட்டுடன் ரகசிய பேரத்தில் ஈடுபட்டு தேச பாதுகாப்புக்கு ஆபத்தை ஏற்படுத்தியதாகவும் ஜனநாயக கட்சியினர் குற்றம் சாட்டினர்.
இதையடுத்து, இந்த விவகாரத்தில் டிரம்பை பதவி நீக்கம் செய்வதற்கான விசாரணையை ஜனநாயக கட்சி எம்.பி.க்கள் தொடங்கினர். ஜனநாயக கட்சியினரின் குற்றச்சாட்டை ஆரம்பத்தில் இருந்து மறுத்து வரும் டிரம்ப், இந்த பதவி நீக்க விசாரணை எதிர்க்கட்சியினரின் சூனிய வேட்டை என விமர்சித்தார்.
ஆனாலும் நாடாளுமன்ற விசாரணைக்குழு இந்த பதவி நீக்க விசாரணையை தொடர்ந்து நடத்தி வருகிறது. ஆரம்பத்தில் இந்த விசாரணை மூடப்பட்ட அரங்கத்துக்குள் நடந்து வந்தது. அதன்பிறகு விசாரணையின் வெளிப்படை தன்மையை உணர்த்தும் வகையில் விசாரணை நடவடிக்கைகள் டி.வி.யில் நேரலையில் ஒளிபரப்பு செய்யப்பட்டன. நேரலை விசாரணையில் ஆஜரான அமெரிக்க தூதர்கள் 2 பேர் டிரம்புக்கு எதிராக சாட்சியம் அளித்தனர்.
ஆனால் அவர்களின் சாட்சியத்தை ஏற்க மறுத்த டிரம்ப், தொடர்ந்து விசாரணை நடவடிக்கைகளை விமர்சித்து வந்தார். தற்போது இந்த பதவி நீக்க விசாரணை அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்துள்ளது. அதன்படி நாளை (புதன்கிழமை) நடைபெறும் விசாரணையில் ஜனாபதி டிரம்ப் நேரிலோ அல்லது வக்கீல் மூலமாகவோ ஆஜராக வேண்டுமென நாடாளுமன்ற விசாரணைக்குழு அழைப்பு விடுத்திருந்தது.
இந்த நிலையில் விசாரணை நடைமுறைகளில் அடிப்படை நேர்மை இல்லாததால் ஜனாதிபதி டிரம்ப் மற்றும் அவரது வக்கீல்கள் பதவி நீக்க விசாரணையில் ஆஜராகமாட்டார்கள் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வெள்ளை மாளிகையின் ஆலோசகர் பாட் சிபோலோன் நாடாளுமன்ற விசாரணைக்குழுவுக்கு கடிதம் அனுப்பி உள்ளார். அந்த கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது:-
சாட்சிகள் இன்னும் பெயரிடப்படாத நிலையில், ஒரு விசாரணையில் நாங்கள் பங்கேற்போம் என்று எதிர்பார்க்க முடியாது. மேலும் கூடுதல் விசாரணைகள் மூலம் விசாரணைக்குழு ஜனாதிபதிக்கு ஒரு நியாயமான செயல்முறையை வழங்குமா என்பது தெளிவாகத் தெரியவில்லை. எனவே தற்போதைய சூழ்நிலையில், உங்கள் புதன்கிழமை விசாரணையில் பங்கேற்க நாங்கள் விரும்பவில்லை.
இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டு உள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply