இலங்கைக்குள் சட்டவிரோதமாகப் பிரவேசித்த “வணங்கா மண்” கப்பல் தடுத்து வைப்பு: மாலுமி உட்பட 17 பேர் கைது

இலங்கை கடற் பரப்புக்குள் சட்ட விரோதமாக பிரவேசித்த வெளிநாட்டுக் கப்பலை கடற்படையினர் நேற்று அதிகாலை தடுத்து நிறுத்தியிருப்பதாக கடற்படை பேச்சாளர் டி. கே. பி. தஸநாயக்க தெரிவித்தார். வன்னியில் வசிக்கும் தமிழர்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கும் போர்வையிலேயே ‘கெப்டன் அலி’ எனும் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த சர்ச்சைக் குரிய கப்பல் இலங்கை கடற் பரப்புக்குள் பிரவேசித்திருப்பதாகவும் கடற்படை பேச்சாளர் கூறினார். பாணந்துறை கடற் பரப்பிலிருந்து மேற்கே 150 கிலோ மீற்றர் கடற் தூரத்தில் வைத்தே ‘கெப்டன் அலி’ எனும் கப்பல் கடற் படையினரால் நேற்றுக் காலை 4 மணியளவில் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.
‘மேர்சி மிஷன் டூ வன்னி’ எனும் தலைப்புடன் வந்த மேற்படி கப்பலில் பயணம் செய்த 15 மாலுமிகளும் அந்த அமைப்பைச் சேர்ந்த ஒருவரும் கடற்படையினரால் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் அவர்களனைவரும் வெளிநாட் டவர்களென்றும் கடற்படை பேச்சாளர் டி. கே. பி. தஸ நாயக்க மேலும் கூறினார்.
பிரிட்டனிலுள்ள இலங்கைத் தமிழர்களால் சேகரித்து அனுப்பப்பட்ட நிவாரணப் பொருட்களுடன் கடந்த ஏப்ரல் 20 ஆம் திகதி ‘வணங்கா மண்’ எனும் கப்பல் பிரிட்டிஷ் துறைமுகத்திலிருந்து பிரான்ஸை சென்றடைந்தது. பிரான்ஸிலிருந்து ‘கெப்டன் அலி’ எனும் கப்பல் மே 07 ஆம் திகதி ‘வணங்கா மண்’ கப்பலில் இருந்த நிவாரணப் பொருட்களுடன் இலங்கையை நோக்கி புறப்பட்டதாகவும் கடற்படை பேச்சாளர் கூறினார். வெளிநாட்டிலிருந்து நிவாரணப் பொருட்களுடன் கப்பலொன்று சட்டவிதிகளை மீறி இலங்கை கடற்பரப்புக்குள் வருவதாக வெளியான செய்திகளையடுத்து கடற்படையினர் மிகுந்த அவதானத்துடன் கடற்பரப்பில் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்ததாகவும் பேச்சாளர் தெரிவித்தார்.

கடற்படையினரால் தடுத்து நிறுத்தப்பட்ட ‘கெப்டன் அலி’ கப்பல் நேற்று மாலையளவில் பாணந்துறை கடற்பரப்புக்கு எடுத்துவரப்பட்டு சோதனையிடப்பட்டு வருகிறது. அதில் பயணித்தவர்கள் விசாரணைக்குட்படுத்தப்பட்டு வருவதாக பேச்சாளர் கூறினார். ஆரம்ப கட்ட சோதனையின் போது மேற்படி கப்பலில் 884 மெற்றிக் தொன் நிறைகொண்ட உணவு மற்றும் மரு ந்துப் பொருட்கள் இருந்ததாகவும் பேச்சாளர் டி. கே. பி. தஸநாயக்க குறிப்பிட்டார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply