அரச உயர் அதிகாரிகள் இருவருக்கு கடூழிய தண்டனை விதிப்பு

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் முன்னாள் ஆளணி பிரதானியான கலாநிதி குசும்தாஸ மகாநாமவுக்கு 20 வருடமும், அரச மரக்கூட்டுத் தாபனத்தின் முன்னாள் தலைவர் பியதாச திஸாநாயக்கவுக்கு 12 வருடமுமாக கடூழிய சிறைத்தண்டனை விதித்து கொழும்பு நிரந்தர நீதாய மூவரடங்கிய விசேட மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இலஞ்சமாக பெற்றுக்கொண்ட 20 மில்லியன் ரூபாவை தண்டப் பணமாக செலுத்துவதற்கும் முதலாவது குற்றவாளியான குசும்தாஸ மகாநாமவுக்கு 65 ஆயிரம் ரூபா தண்டப் பணமும் இரண்டாவது குற்றவாளியான பியதாச திஸாநாயக்கவுக்கு 55 ஆயிரம் ரூபா தண்டப் பணமும் அதனை செலுத்த தவறின் 6 மாத கால சிறைத் தண்டனையும் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்தியப் பிரஜையான முதலீட்டாளர் ஒருவரிடமிருந்து 20 மில்லியன் ரூபாவை இலஞ்சமாக பெற்றுக்கொண்டமை உட்பட பாரிய பல குற்றங்களின் குற்றவாளியாக காணப்பட்டதை தொடர்ந்தே இத் தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டது.

கந்தளாய் சீனித் தொழிற்சாலைக்கு சொந்தமான கட்டடம் மற்றும் இரும்புகளை வழங்குவதற்காக இலஞ்சமாக 100 மில்லியன் ரூபாவை கோரி அதில் 20 மில்லியன் ரூபாவை இந்திய பிரஜையான முதலீட்டாளர் கே.பி. நாகராஜாவிடமிருந்து இலஞ்சமாக பெற்றுக்கொண்டமை தொடர்பில் இந்த வழக்கு தொடரப்பட்டது.

இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக அரசாங்கத்தில் உயர் பதவி வகிக்கும் அரச அதிகாரியொருவரால் பெற்றுக்கொள்ளப்பட்ட அதிகமான இலஞ்சமென அதனைக் குறிப்பிட்ட சிரேஷ்ட சட்டத்தரணி ஜனக பண்டார இலங்கைக்கு முதலீட்டுக்காக வரும் வெளிநாட்டு பிரஜையொருவரிடமிருந்து இவ்வாறு இலஞ்சம் பெற்றுள்ளதால் சர்வதேச ரீதியில் இலங்கைக்கு அபகீர்த்தியே ஏற்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.  

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply