சென்னையில் பொங்கல் பரிசு-ரூ.1000 வழங்குவது எப்போது?: தமிழக அரசு இன்று முடிவு

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறாத சென்னை உள்பட 10 மாவட்டங்களுக்கு பொங்கல் பரிசு- ரூ.1000 வழங்கும் தேதியை அரசு இன்று முடிவு செய்கிறது.தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையையொட்டி பொங்கல் தொகுப்பு ரொக்கப் பணம் வழங்கப்பட்டு வருகிறது.

எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சரானதில் இருந்து பொங்கல் தொகுப்புடன் 1000 ரூபாய் ரொக்கப் பணமும் வழங்கப்படுகிறது.

இந்த ஆண்டு உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவதையொட்டி பொங்கல் பரிசு பணம் வழங்கும் திட்டத்தை முன் கூட்டியே எடப்பாடி பழனிசாமி தலைமைச் செயலகத்தில் தொடங்கி வைத்தார்.

இதைத் தொடர்ந்து ஒவ்வொரு மாவட்டத்திலும் ரே‌ஷன் கடைகள் மூலம் பொங்கல் தொகுப்பு- ரொக்கப் பணத்தை வழங்க உணவு கூட்டுறவு துறையினர் முன் ஏற்பாடு செய்து வந்தனர்.

தற்போது உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளதால் இந்த சமயத்தில் பொங்கல் பரிசு பணம் வழங்குவது தேர்தல் நடத்தை விதிகளுக்கு எதிரானது என்று திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த சுப்புலட்சுமி மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

27 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் நடக்க உள்ள நிலையில், இந்த திட்டத்தை செயல்படுத்துவது ஆளும் கட்சி சார்பில் சட்ட பூர்வமாக லஞ்சம் கொடுப்பது போல் ஆகும்.

அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கு வாக்களிப்பதாக உறுதி அளித்தால் மட்டுமே பொங்கல் இலவச பொருட்களுக்கான டோக்கன் தருவதாக அ.தி.மு.க. நிர்வாகிகள் வாக்காளர்களிடம் தெரிவித்துள்ளனர். எனவே இப்போது இலவச திட்டத்தை செயல்படுத்துவது தேர்தல் நடத்தை விதியை மீறும் செயல் என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் துரைசாமி, ரவீந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தபோது தமிழக அரசின் அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயணன் ஆஜராகி ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் 27 மாவட்டங்களில் பொங்கல் இலவச பொருட்கள் வழங்கப்படாது என்றும், தேர்தல் அறிவிக்கப்படாத 10 மாவட்டங்களில் மட்டுமே 1000 ரூபாயுடன் பொங்கல் பரிசு பொருட்கள் வழங்கப்படும் என்று கூறினார்.

மாநில தேர்தல் ஆணையமும், தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறையில் உள்ள மாவட்டங்களை தவிர்த்து மற்ற 10 மாவட்டங்களில் பொங்கல் இலவச பொருட்களை அரசு வழங்கலாம் என்று அனுமதி கொடுத்துள்ளது.

இதனால் பொங்கல் தொகுப்பு-ரொக்கப் பணம் ரூ.1000 ஆகியவற்றை சென்னை உள்பட 10 மாவட்டங்களில் எப்போது வழங்கலாம் என்று இன்று ஆலோசித்து முடிவு செய்ய உள்ளதாக அரசு உயர் அதிகாரி தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply