எங்கள் பொருளாதார இலக்கு கானல் நீரல்ல – எட்டக் கூடியதுதான் : பிரதமர் மோடி உறுதி

இந்திய தொழில், வர்த்தகசபையின் (அசோசெம்) வருடாந்திர மாநாடு டெல்லியில் நேற்று நடைபெற்றது. வர்த்தக சபை 100 ஆண்டுகளை நிறைவு செய்ததையொட்டி சிறப்பு தபால்தலையை பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டார். விழாவில் பிரதமர் மோடி பேசும்போது கூறியதாவது:-

இந்திய பொருளாதாரத்தை முன்னேற்ற நாங்கள் கடுமையாக பணிபுரிந்து வருகிறோம். இப்போது எங்கள் கவனம் ரூ.350 லட்சம் கோடி (5 டிரில்லியன் அமெரிக்க டாலர்) பொருளாதார நாடு என்ற இலக்கை அடைய வேண்டும் என்பதே. இது கானல் நீரல்ல, இதை அடைவதற்கான தகுதி எங்களிடம் இருப்பதால், இந்த சவாலை பார்த்து நாங்கள் பயப்படவில்லை.

இந்த இலக்கை அடைவதற்காக வலுவான அடித்தளம் அமைத்துள்ளோம். எளிதாக தொழில் தொடங்குவதற்கான நாடுகள் பட்டியலில் இந்தியாவின் தகுதி கடந்த 3 ஆண்டுகளாக நிலையாக உயர்ந்து வருகிறது. நீங்கள் இரவு, பகலாக கடுமையாக உழைப்பதாலும், கொள்கைகளில் மாற்றம் கொண்டு வந்ததாலும் இந்த தகுதி உயர்ந்துவருகிறது.

5-6 ஆண்டுகளுக்கு முன்பு நமது பொருளாதாரம் பேரழிவை நோக்கி சென்றது. எங்கள் அரசு அதனை நிலைப்படுத்தி, அதில் ஒரு ஒழுங்கை கொண்டுவர முயற்சி மேற்கொண்டது. தொழில் துறையில் 10 ஆண்டுகளுக்கு முந்தைய கோரிக்கைகளை நிறைவேற்றுவதில் கவனம் செலுத்தினோம்.

பொருளாதாரம் தொடர்பான பல துறைகளை அரசு ஒழுங்குமுறைப்படுத்த முயற்சி மேற்கொண்டது. பொருளாதார வளர்ச்சியை வேகப்படுத்த தொழில்நுட்பத்தை நவீனமயமாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. வங்கித்துறைகள் முன்னேற்றம் அடைந்துள்ளது. வங்கி செயல்பாடுகளில் அரசாங்கம் தலையிடுவதை முடிவுக்கு கொண்டுவந்தோம்.

கம்பெனிகள் சட்டத்தில் குறிப்பிட்ட விதிகளை தவறாக நிர்வகித்தால் இப்போது குற்ற நடவடிக்கை இல்லை. நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை, திறன், பொறுப்புடைமை ஆகியவற்றை கொண்டுவந்துள்ளோம். மின்னணு முறையிலான வரி நிர்வாகத்தை நோக்கி முன்னேறிக்கொண்டு இருக்கிறோம். உலகளவிலான போட்டியை எதிர்கொள்ள தரத்தை உயர்த்துவது கட்டாயம்.

இவ்வாறு அவர் கூறினார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply