சர்வதேச சமூகமோ அல்லது இந்தியாவோ எதையுமே தமிழர்களுக்கு உருப்படியாகச் செய்யுமென்று இனிமேலும் வீணாக நம்பாதிருப்போமாக!

இலங்கைத் தமிழ் மக்கள் அவர்களின் உரிமைகளைப் பெறுவதற்கான போராட்டங்களின் வரலாற்றிலே இன்று உள்ளதைப் போன்று முன்னர் என்றுமே நம்பிக்கை இழந்த நிலையில் ஒரு அரசியல் வெற்றிடத்தில் இருந்ததில்லை. இலங்கை பிரிட்டிஷாரிடமிருந்து சுதந்திரம் பெற்ற பிறகு மிதவாதத் தமிழ்த் தலைவர்கள் முன்னெடுத்த மூன்று தசாப்தகால அகிம்சைப் போராட்டங்களும் அவற்றுக்குப் பின்னரான மூன்று தசாப்தங்களில் தமிழ்த் தீவிரவாத இயக்கங்கள் முன்னெடுத்த ஆயுதப் போராட்டங்களும் தோல்வியிலேயே முடிந்திருக்கின்றன. போர் முடிவடைந்து விட்டதாக அரசாங்கம் இருவாரங்களுக்கு முன்னர் அறிவித்ததைத் தொடர்ந்து வந்த நாட்களில் பல உள்நாட்டு, வெளிநாட்டு அரசியல் ஆய்வாளர்கள் எழுதிய கட்டுரைகளில் இலங்கைத் தமிழ் மக்கள் அரசியல் தலைமைத்துவம் அற்றவர்களாக இன்று நட்டாற்றில் விடப்பட்டிருக்கிறார்கள் என்று அபிப்பிராயம் தெரிவித்திருப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது.

தமிழ்த் தேசியவாதத் தலைமைத்துவங்களின் பிற்போக்கான அரசியல் நிலைப்பாடுகளே தமிழ் மக்களின் உரிமைப் போராட்டங்களை தோல்வியை நோக்கித் தள்ளிவிட்டிருக்கின்றன என்பது தெளிவாக நிரூபிக்கப்பட்டிருக்கிறது. இக்கட்டத்தில் 1975 ஆம் ஆண்டு யாழ்ப்பாணக் குடாநாட்டில் இடம்பெற்ற அரசியல் விவாதம் ஒன்றை நினைவுபடுத்துவது பொருத்தமானதாக இருக்கும். தந்தை செல்வா தலைமையில் தமிழர் விடுதலை கூட்டணி தனிநாட்டுக் கோரிக்கையை முன்வைக்க ஆரம்பித்த தருணம் அது. தனிநாட்டுக் கோரிக்கை தமிழ் மக்களுக்கு விடிவைத் தருமா இல்லையா என்ற தலைப்பில் சுன்னாகம் சந்தை மைதானத்தில் அப்போதைய உடுவில் தொகுதி பாராளுமன்ற உறுப்பினரும் தமிழர் விடுதலை கூட்டணியின் சிரேஷ்ட தலைவர்களில் ஒருவருமான வி.தருமலிங்கத்துக்கும் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி (சீனச்சார்பு) யின் பொதுச் செயலாளர் என்.சண்முகதாசனுக்கும் இடையே விவாதம் இடம் பெற்றது. அதற்கு தலைமை தாங்கியவர் முன்னாள் ஸ்கந்தவரோதயா கல்லூரி அதிபர் ஒறேற்றர் சுப்பிரமணியம். இன்று இந்த மூவருமே உயிருடன் இல்லை.

தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்கு நடைமுறைச் சாத்தியமான கொள்கைகளையும் தந்திரோபாயங்களையும் முன்வைக்க முடியாத தமிழ்த் தேசியவாதத் தலைவர்கள் தனிநாட்டுக் கோரிக்கையை முன்வைப்பதன் மூலமாக அந்த மக்களை மீண்டும் தவறான பாதையில் வழி நடத்த ஆரம்பித்திருக்கிறார்கள் என்பதே சண்முகதாசனின் விவாத உரையின் சாராம்சமாக இருந்தது. அதிகாரத்தில் இருந்த சகல அரசாங்கங்களுமே தமிழ் மக்களின் உரிமைகளை வழங்கத் தவறியதனாலும் தென்னிலங்கை சிங்களத் தலைமைத்துவங்களை இனி மேலும் தமிழ் மக்கள் நம்பமுடியாத நிலை ஏற்பட்டதனாலுமே வேறு வழியின்றி தனிநாட்டுக் கோரிக்கையை தமிழர் விடுதலைக் கூட்டணி முன்வைத்தது என்பதே தருமலிங்கத்தின் உரையின் சாராம்சம். தனிநாட்டுக் கோரிக்கை என்பது தமிழ் மக்களை அரசியல் மாயைக்குள் தள்ளிவிடும் ஒரு ஏமாற்று நாடகம் என்று குறிப்பிட்ட சண்முகதாசன், நிலவை பிடித்து கையில் தந்தால் தான் உணவு உண்பேன் என்று குழந்தைப் பருவத்திலே அடம்பிடித்து அழுத இராம பிரானைச் சாந்தப்படுத்துவதற்காக வசிட்டர் முகம் பார்க்கும் கண்ணாடியொன்றை எடுத்து வந்து அதன் மூலம் நிலாவை காண்பித்து உணவு ஊட்டிய இராமாயணக் கதையைப் போன்றதே தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வாக தனிநாட்டுக் கோரிக்கையை முன்வைத்த தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயல் என்று குறிப்பிட்டார். இந்த விவாதம் நடைபெற்று 34 வருடங்கள் கடந்து விட்டன. தனிநாட்டைக் காண்பதற்கான சகல போராட்டங்களுமே வெற்றியடையத் தவறிய நிலையில், இலங்கைத் தமிழ் மக்கள் அடைந்த அரசியல் பலாபலன்கள் என்று எதையுமே மீதியாகக் காண முடியாத நிலையில் வரலாற்றை ஒருகணம் திரும்பிப்பார்க்கும் போது சுன்னாகம் சந்தை மைதான விவாதத்தில் அந்த இடதுசாரித் தலைவர் தனிநாட்டுக் கோரிக்கையுடன் கண்ணாடியில் பிரதிபலித்த வானத்து நிலவை ஒப்பிட்டது எந்தளவுக்கு பொருத்தமானதாக இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்வதில் அகவுணர்வுகளுக்கு அப்பால் சிந்திக்கும் எவருக்கும் சிரமம் இருக்கமுடியாது.

கண்ணாடியில் நிலவைக் காட்டி தமிழ் மக்களுக்கு அவலங்களை விளைவித்த பொறுப்பில் இருந்து மிதவாதத் தமிழ்த் தலைவர்களாக இருந்தாலென்ன ஆயுதமேந்திப் போராடிய இயக்கங்களின் தலைவர்களாக இருந்தாலென்ன தப்ப முடியாது. தவறான கொள்கைகளும் தவறான தந்திரோபாயங்களுமே இன்று தமிழ் மக்களை அரசியல் அனாதைகளாக்கியிருக்கின்றன என்பதை இவர்கள் புரிந்து கொள்ளவேண்டும். வரலாற்றில் இருந்து படிப்பினைகளைப் பெற்றுக்கொண்டு சுயவிமர்சனங்களுக்கு தங்களை உட்படுத்திக் கொள்ளவேண்டிய தலையாய கடமை இன்று எஞ்சியிருக்கும் தமிழ் அரசியல்வாதிகளுக்கு இருக்கிறது. கொடூரமான அனுபவங்களுக்குப் பிறகு இலங்கைத் தமிழ் அரசியல் சமுதாயம் தமிழ் மக்களின் மீட்சிக்கு எத்தகைய மார்க்கத்தைக் காண்பிக்கப்போகிறது என்பதே இன்று எழும் முக்கிய கேள்வியாகும். தமிழ் மக்கள் அரசியல் தலைமைத்துவம் அற்றவர்களாக இருக்கிறார்கள் என்று கூறும் ஆய்வாளர்கள், தற்போதைய தமிழ் அரசியல் வாதிகளை குறிப்பாக, ஆயுதப் போராட்டத்தைக் கைவிட்டு ஜனநாயக அரசியல் நீரோட்டத்தில் கலந்திருக்கும் அரசியல்வாதிகளைப் பற்றி என்ன நினைக்கிறார்கள்? அரசாங்கத்தின் நிலைப்பாட்டுடன் ஒத்துப் போவதைத் தவிர வேறுமார்க்கம் இவர்களுக்கு இல்லை என்று ஆய்வாளர்கள் கருதுகிறார்களா? இதற்கு அந்த அரசியல்வாதிகளே பதில் சொல்ல வேண்டும்.

போர் முடிவுக்கு வந்தாலும் தமிழ் மக்களின் பிரச்சினைகள் முடிவுக்கு வரவில்லை. அவர்களின் நியாயபூர்வமான அரசியல் அபிலாசைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டியிருக்கிறது. இந்த அபிலாசைகளுக்காக குரல் கொடுக்கக் கூடியதாக வலுவான தமிழ் அரசியல் சமுதாயத்தை மீளக் கட்டியெழுப்ப வேண்டியிருக்கிறது. இதற்காக ஆட்கள் ஆகாயத்தில் இருந்து வருவதில்லை. தற்போது இருக்கும் தமிழ் அரசியல்வாதிகள் தான் தங்களை முனைப்புறுத்தி தமிழ் மக்கள் இன்று இருக்கக்கூடிய அரசியல் வெற்றிடத்தை நிரப்ப வேண்டும். முன்னைய முரண்பாடுகளையும் குரோதங்களையும் மறந்து செயற்பட வேண்டிய தலையாய கடைமை இவர்களைக் காத்திருக்கிறது. நிலைவரம் வேண்டி நிற்பதற்கு ஏற்ப தங்களுக்கு இருக்கக் கூடிய வரலாற்றுப் பாத்திரத்தை தன்னுறுதியுடனும் அரசியல் துணிச்சலுடன் வகிப்பதற்கு இவர்கள் முன்வர வேண்டும். இல்லையேல் வரலாறு இவர்களை மன்னிக்காது. முன்னைய தந்திரோபாயங்களைக் கைவிட்டு தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை அங்கீகரிக்கக் கூடிய தென்னிலங்கை அரசியல் சக்திகளுடன் அணி சேருவதற்கு முயற்சிக்க வேண்டும்.

சர்வதேச சமூகமோ அல்லது இந்தியாவோ எதையுமே தமிழர்களுக்கு உருப்படியாகச் செய்யுமென்று இனிமேலும் வீணாக நம்பாதிருப்போமாக!

மூலம்/ஆக்கம் : இணையத்தள கட்டுரை


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply