ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகளை அறிவிக்க தடை கேட்டு வழக்கு : ஐகோர்ட்டில் 30-ந்தேதி விசாரணை

சட்டப் பஞ்சாயத்து இயக்கத்தின் பொதுச்செயலாளர் செந்தில் ஆறுமுகம், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

1996-ம் ஆண்டு முதல் 2001-ம் ஆண்டு வரை நடத்தப்பட்ட உள்ளாட்சி தேர்தல்களை பொறுத்தமட்டில் நகர்ப்புற மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் ஒரே சமயத்தில் நடத்தப்பட்டன. ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தனித்தனியாக தேர்தல் நடத்துவது அரசியல் சட்டத்துக்கு விரோதமானது.

ஊராட்சி உறுப்பினர் மற்றும் தலைவர் தேர்தலை பொறுத்தமட்டில் அரசியல் கட்சி சார்பில் போட்டியிட அனுமதியில்லை. அதேவேளையில் ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் மற்றும் மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவிகளுக்கு அரசியல் கட்சி சார்பில் போட்டியிட அனுமதிக்கப்படுகிறது.

அப்படி இருக்கும்போது, ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் முடிவுகளை நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலை நடத்துவதற்கு முன்பாக வெளியிட்டால், அது நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலின் வாக்குப்பதிவில் தாக்கத்தை ஏற்படுத்தும். நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல்கள் பல கட்டங்களாக நடத்தப்பட்டாலும், வாக்கு எண்ணிக்கை ஒரே நாளில் தான் மேற்கொள்ளப்படுகிறது.

எனவே, ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் முடிவுகளை ஒன்றாக சேர்த்து வெளியிட உத்தரவிட வேண்டும். நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலை நடத்தி முடிக்கும் வரை ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் முடிவுகளை அறிவிக்க தடை விதிக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த வழக்கு 30-ந்தேதி (திங்கட்கிழமை) விசாரணைக்கு வருகிறது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply