புத்தாண்டு கொண்டாட்டம்: அடையாள அட்டை வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே அறை ஒதுக்க வேண்டும் : போலீஸ் அறிவுரை
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது ஓட்டல்கள், விடுதிகள், கடற்கரை பண்ணை வீடுகள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து அவற்றின் இயக்குனர்கள், உரிமையாளர்களை அழைத்து தனியார் ஓட்டல் ஒன்றில் மாமல்லபுரம் துணை கோட்ட உதவி போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் தலைமையில் போலீசார் ஆலோசனை கூட்டம் நடத்தினர். பிறகு புத்தாண்டு பிறப்பு நள்ளிரவு அன்று ஓட்டல் நிர்வாகத்தினர் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து உதவி போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் விளக்கி கூறினார்.
பின்னர் இதுகுறித்து மாமல்லபுரம் உதவி போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
மாமல்லபுரம் கடற்கரை பகுதியில் புத்தாண்டு வாழ்த்து சொல்லும் சாக்கில் சுற்றுலா வரும் பெண்களை கேலி, கிண்டல் செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மாமல்லபுரத்தில் உள்ள ஓட்டல்களில் 31-ந்தேதி மாலை 6 மணிக்கு மேல் நீச்சல் குளங்களில் குளிக்க அனுமதி வழங்க கூடாது.
நீச்சல் குளங்கள் போலீசாரின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டு சீல் வைக்கப்படும். மது குடித்துவிட்டு நீச்சல் குளங்களில் குளித்து போதையில் நிலைதடுமாறி விழுந்து, மூச்சு திணறி உயிரிழப்புகள் ஏற்படுவதை தடுக்கும் வகையில் முன்னேற்பாடாக காவல் துறை சார்பில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும் எந்த ஓட்டல்களிலும் 12 மணிக்கு மேல் கேளிக்கை நிகழ்ச்சிகள் நடத்த கூடாது. குறிப்பாக கடற்கரை ரிசார்ட்டுகளில் தங்கி உள்ளவர்கள் இரவு 12 மணிக்கு மேல், அறைகளைவிட்டு வெளியே வர கூடாது. பின்புறம் உள்ள கடற்கரை பகுதிக்கு செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள். அங்குள்ள கடலில் குளிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் மாமல்லபுரம் கடற்கரை பகுதிக்கு புத்தாண்டு கொண்டாட வரும் பெண்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். முகம் தெரியாத நபர்கள் தரும் உணவு பண்டங்களை வாங்க கூடாது. மாமல்லபுரம் கடற்கரை சாலை, ஐந்துரதம், அர்ச்சுனன் தபசு மற்றும் கிழக்கு கடற்கரை சாலை பகுதிகளில் 400 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். புத்தாண்டு கொண்டாடத்தின்போது மது குடித்து விட்டு வாகனம் ஓட்டினால் அந்த வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு, அவர்களின் உரிமம் ரத்து செய்யப்படும். மதுபோதையில் பெண்களை கிண்டல், கேலி செய்பவர்கள் கைது செய்யப்படுவார்கள்.
குற்ற செயல்களை கண்டுபிடிக்கும் வகையில் மப்டி உடையிலும் போலீசார் ரகசிய கண்காணிப்பில் ஈடுபட உள்ளனர். கிழக்கு கடற்கரை சாலை மற்றும் பழைய மாமல்லபுரம் சாலையில் செல்லும் இரு சக்கர வாகனங்கள் உள்பட அனைத்து வாகனங்களும் 10 தற்காலிக சோதனை சாவடிகள் மூலம்் வாகன தணிக்கை செய்யப்படும்.
மாமல்லபுரம் முதல் முட்டுக்காடு வரை இ.சி.ஆர். சாலையில் உள்ள 500 கண்காணிப்பு கேமராக்கள் பதிவு ஆகும் காட்சிகள் காவலர்கள் மூலம் 24 மணி நேரமும் கண்காணிக்கப்படும். வரும் 31-ந்தேதி மாலை 6 மணி முதல் கோவளம் சோதனை சாவடி அருகில் மடக்கப்பட்டு இரு சக்கர வாகனங்களில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்து வரும் வாலிபர்கள் திருப்பி அனுப்பப்படுவார்கள். இவர்கள் மாமல்லபுரம் செல்ல அனுமதி கிடையாது. குடும்பத்துடன் இரு சக்கர வாகனத்தில் வருபவர்கள் மாமல்லபுரம் செல்ல வழக்கம்போல் அனுமதிக்கப்படுவார்கள்.
குறிப்பாக ஓட்டல்கள், கேளிக்கை விடுதிகளில் வரவேற்பு அறையில் உள்ள கண்காணிப்பு கேமரா கண்டிப்பாக இயங்க வேண்டும். அறை எடுத்து கேளிக்கை கொண்டாட்ட நிகழ்ச்சிகளுக்கு வருபவர்களிடம் ஆதார் அட்டை, தேர்தல் வாக்காளர் அட்டை உள்ளிட்ட ஏதாவது ஒரு அடையாள அட்டை வைத்திருந்தால் மட்டுமே ஓட்டல் நிர்வாகத்தினர் அறைகள் ஒதுக்கி தரவேண்டும். அடையாள அட்டை சமர்பிக் காத நபர்களுக்கு அறைகள் கொடுக்க கூடாது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த கூட்டத்தில் மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிக்குமார், மாமல்லபுரம் ஓட்டல்கள் மற்றும் கேளிக்கை விடுதி உரிமையாளர்கள், இயக்குனர்கள், மேலாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply