இஸ்ரேலில் கட்சி தலைவர் தேர்தலில் பிரதமர் நேட்டன்யாஹூ வெற்றி
இஸ்ரேலில் கடந்த ஏப்ரல் மாதம் நடந்த பொதுத்தேர்தலில் பிரதமர் பெஞ்சமின் நேட்டன்யாஹூவின் லிகுட் கட்சி உள்பட எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால், செப்டம்பர் மாதம் 2-வது முறையாக பொதுத்தேர்தல் நடந்தது.
ஆனால் அதிலும் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால் அடுத்த ஆண்டு மார்ச் 2-ந்தேதி அங்கு மீண்டும் பொதுத்தேர்தல் நடக்க இருக்கிறது. இந்த சூழலில் அடுக்கடுக்கான ஊழல் புகார்களால் பிரதமர் பெஞ்சமின் நேட்டன்யாஹூ தனது சொந்த கட்சிக்குள் செல்வாக்கை இழந்து வருவதாக தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில் அவரது லிகுட் கட்சிக்கு தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் வெற்றி பெற்று கட்சிக்கு தலைவரானால் மட்டுமே மார்ச் மாதம் நடைபெறும் பொதுத்தேர்தலில் பிரதமர் வேட்பாளராக போட்டியிட முடியும் என்கிற சூழலில் நேட்டன்யாஹூ இந்த தேர்தலை எதிர்கொண்டார்.
அவரை எதிர்த்து முன்னாள் உள்துறை மந்திரி கிடியோன் சார் போட்டியிட்டார். நேட்டன்யாஹூவுக்கு கட்சிக்குள் ஆதரவு குறைவாக இருப்பதாகவும், எனவே இந்த தேர்தலில் அவர் வெற்றி பெற வாய்ப்பு இல்லை எனவும் கருத்து கணிப்புகள் தெரிவித்தன. ஆனால் கருத்துகணிப்புகளை பொய்யாக்கும் வகையில் அதிக வாக்கு வித்தியாசத்தில் நேட்டன்யாஹூ இந்த தேர்தலில் வெற்றி பெற்றார். அவருக்கு 70 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகள் கிடைத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தன்னை வெற்றி பெற செய்த லிகுட் கட்சி உறுப்பினர்களுக்கு நன்றி தெரிவித்துள்ள நேட்டன்யாஹூ வரவிருக்கும் பொதுத்தேர்தலில் அமோக வெற்றி பெற்று இஸ்ரேலின் வளர்ச்சிக்கு தலைமை தாங்குவேன் என சூளுரைத்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply