செல்லாத நோட்டுகளை மாற்றி சொத்து வாங்கியது தொடர்பாக உறவினருக்கு கடிதம் எழுதிய சசிகலா

ஜெயலலிதாவின் தோழி சசிகலா 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் பணமதிப்பிழப்பு திட்டம் அறிவிக்கப்பட்டபோது அந்த பணத்தை பயன்படுத்தி பல கோடி ரூபாய்க்கு சொத்து வாங்கியதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. அதாவது ரூ.1,674 கோடிக்கு சொத்து வாங்கியதாகவும், ரூ.237 கோடி கடன் வழங்கியதாகவும் கூறப்பட்டது. இதுசம்பந்தமான பல்வேறு ஆதாரங்களை வருமான வரித்துறையினர் திரட்டி உள்ளனர்.

இவ்வாறு செல்லாத நோட்டுக்களை பயன்படுத்தி சொத்து வாங்கிய விவரம் வருமான வரித்துறையினர் சசிகலா உறவினர்கள் வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்தியபோது தெரியவந்தது.

2017-ம் ஆண்டு நவம்பரில் இந்த சோதனையை வருமான வரித்துறையினர் மேற்கொண்டனர். அப்போது தான் சசிகலா புதிதாக பல்வேறு சொத்துக்களை வாங்கி இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.

அதில் பல சொத்துக்கள் செல்லாத நோட்டுக்களை பயன்படுத்தி வாங்கி இருந்தார். இதுசம்பந்தமாக பல்வேறு ஆதாரங்களையும் வருமான வரித்துறையினர் கைப்பற்றினார்கள். மேலும் சசிகலாவின் சட்ட ஆலோசகர் வக்கீல் செந்தில் உள்ளிட்ட பல்வேறு நபர்களிடம் விசாரணை நடத்தியதிலும் சசிகலா செல்லாத நோட்டுக்களை பயன்படுத்தி சொத்து வாங்கியது உறுதிபடுத்தப்பட்டது.

இந்த சொத்துக்கள் வாங்கப்பட்டது தொடர்பாக சசிகலாவே தனது கைப்பட எழுதிய கடிதம் ஒன்றும் வருமான வரித்துறையினருக்கு கிடைத்துள்ளது.

சசிகலாவின் அண்ணி இளவரசியின் மகன் விவேக் ஜெயராமன் வீட்டில் 2017-ல் நவம்பர் மாதம் சோதனை நடத்தியபோது அந்த கடிதம் கிடைத்தது.

பெங்களூரு ஜெயிலில் இருந்த சசிகலா செப்டம்பர் 2017-ல் இந்த கடிதத்தை எழுதி உள்ளார். அதில் செல்லாத ரூபாய் நோட்டுக்களை பயன்படுத்தி என்னென்ன சொத்துக்கள் வாங்கப்பட்டுள்ளன என்ற விவரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதை சசிகலாவே தனது கைப்பட தமிழில் எழுதி உள்ளார். அந்த கடிதம் தான் விவேக் ஜெயராமன் வீட்டில் கிடைத்தது.

அதுபற்றி வருமான வரித்துறையினர் விவேக் ஜெயராமனிடம் கேட்ட போது இந்த கடிதத்தை 2 மாதத்துக்கு முன்பு யாரோ ஒரு நபர் எனது வீட்டு வாசலில் இருந்த காவலாளியிடம் கொடுத்து விட்டு சென்றனர். காவலாளி அதை என்னிடம் கொடுத்தார். அதை நான் வீட்டில் வைத்திருந்தேன் என்று கூறினார்.

எந்த காவலாளி கொடுத்தார் என்று கேட்டதற்கு வீட்டில் 2 காவலாளிகள் இருக்கிறார்கள். அதில் யார் கொடுத்தார் என்று தெரியாது என்று விவேக் ஜெயராமன் வருமான வரித்துறையிடம் கூறினார்.

அப்படியானால் எந்த தேதியில் அந்த கடிதம் வந்தது என்பதை வைத்து அப்போது பணியில் இருந்த காவலாளியிடம் விசாரிக்கலாம் என வருமான வரித்துறையினர் விவேக் ஜெயராமனிடம் விவரம் கேட்டனர். ஆனால் எனக்கு தேதி தெரியாது என்று கூறிவிட்டார்.

வருமான வரித்துறை அதிகாரிகள் அவரிடம் ஏன் கடிதத்தை பத்திரப்படுத்தி வைத்திருக்கிறீர்கள் என்று கேட்டதற்கு, அந்த கடிதம் தொடர்பாக சசிகலாவிடம் நான் பேச வேண்டும் என்று நினைத்தேன். எனவே தான் வைத்திருந்தேன்.

ஆனால் எனக்கு இருந்த பல பிரச்சனைகள் காரணமாக சசிகலாவிடம் பேசாமல் விட்டுவிட்டேன் என்று கூறினார்.

அந்த கடிதத்தில் உள்ள கையெழுத்து சசிகலாவினுடையதா என்பதை அறிய சசிகலாவின் சட்ட ஆலோசகர் செந்திலிடம் கேட்டனர். அது சசிகலா கையெழுத்து தான் என்று அவர் உறுதி செய்திருப்பதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் இது தொடர்பாக வக்கீல் செந்திலிடமும் வருமான வரித்துறையினர் விரிவாக விசாரணை நடத்தி உள்ளனர். அதுபற்றி செந்தில் வருமான வரித்துறை அதிகாரிகளிடம் கூறியபோது, ஜெயலலிதா மரணம் அடைவதற்கு சில நாட்களுக்கு முன்பு செல்லாத பணத்தை பயன்படுத்தி சொத்துக்கள் வாங்குவது தொடர்பாக என்னிடம் சில தகவல்களை கூறினார். அதில் உள்ள விவரங்கள் தான் கடிதத்தில் இருக்கின்றன என்று சொன்னார்.

2017-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் இறுதியில் விவேக் ஜெயராமனை அவரது வீட்டில் சந்தித்ததாகவும் அப்போது சசிகலாவின் கடிதத்தை விவேக் ஜெயராமன் தன்னிடம் காட்டியதாகவும் செந்தில் கூறினார்.

மேலும் 2016 டிசம்பர் மாதம் சசிகலா தன்னிடம் ஒரு கவர் கொடுத்திருந்தார். அந்த கவரை பரோலில் வரும்போது, சசிகலாவிடம் ஒப்படைத்துவிடுங்கள் என்று விவேக் ஜெயராமன் கூறினார்.

ஆனால் நான் பின்னொரு நாளில் நேரடியாகவே சசிகலாவிடம் அதை வழங்கி விட்டேன் என்று செந்தில் வருமான வரித்துறையிடம் கூறியுள்ளார்.

செல்லாத நோட்டை பயன்படுத்தி சசிகலா வாங்கிய சொத்துக்கள் பற்றிய விவரங்கள் மற்றும் அதற்கான ஆதாரங்கள் கிடைத்ததால் அதன் அடிப்படையில் சசிகலாவுக்கு வருமான வரித்துறையினரால் நோட்டீசு அனுப்பப்பட்டுள்ளது.

அதில் நீங்கள் பணமதிப்பிழப்பு நோட்டை பயன்படுத்தி ஏராளமான சொத்துக்கள் தமிழ்நாடு முழுவதும் வாங்கி உள்ளீர்கள். இதற்கான ஆதாரங்களை நாங்கள் திரட்டி இருக்கிறோம். எனவே இதற்கு விளக்கம் தாருங்கள் என்று கூறப்பட்டிருக்கிறது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply