காணாமல் போனோர் விவகாரத்திற்கு தீர்வு வழங்க விசேட குழு : அமைச்சரவை அனுமதி

காணாமல் போனோர் பிரச்சினை தொடர்பில் கடந்த காலங்களில் அமைக்கப்பட்ட விசாரணைக் குழுக்களின் அறிக்கைகளை ஆராய்ந்து அதன் அடிப்படையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தீர்வு காண்பதற்கு விசேட குழுவொன்றினை அமைப்பதற்கு அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் 02.01.2020 அன்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட காணாமல் போனோர் விவகாரம் தொடர்பான கோரிக்கை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில் மேற்குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கடந்த வாரம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்த காணாமல் போனோரின் உறவினர்கள், தமது சார்பாக அரசாங்கத்துடன் கலந்துரையாடி கௌரவமான தீர்வினைப் பெற்றுத் தருமாறு வேண்டுகோள் விடுத்திருந்தனர்.

இந்நிலையில் குறித்த விடயத்தினை இன்றைய அமைச்சரவை கூட்டத்தில் முன்வைத்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தர், காணாமல் போனோரின் உறவினர்களில் பெரும்பாலானோர் அரசாங்கத்துடன் கலந்துரையாடி கௌரவான தீர்வினைப் பெற்றுக் கொள்ளத் தயாராக இருப்பதாகவும், ஆனால் இந்த விவகாரத்தினை தீராத பிரச்சினையாக வைத்திருந்து அரசியல் ஆதாயம் தேட முற்படுகின்ற அரசியல் கட்சிகளின் பின்னணியில் இயங்குகின்ற ஒரு சிறு பகுதியினரே தொடர்ந்தும் குழப்பங்களை மேற்கொண்டு வருவதாகவும் எடுத்துக் கூறினார்.

இதனையடுத்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அமைச்சர்களினால் பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்ட நிலையில், குறித்த விவகாரம் தொடர்பாக கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு உட்பட அனைத்து விசாரணைக் குழுக்களின் அறிக்கைகளையும் விரிவாக ஆராய்ந்து அதனடிப்படையில் கூடிய விரைவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பரிகாரம் வழங்கப்படும் எனவும் அதற்கான குழு ஒன்றினை உடனடியாக அமைக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply