வல்லரசு நாடுகளுடனான அணுசக்தி ஒப்பந்தம் ரத்து : ஈரான் அதிரடி அறிவிப்பு

அணு ஆயுதங்களை அதிக அளவில் கையிருப்பு வைத்து, பிறநாடுகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வந்த ஈரானுடன் அமெரிக்கா, ர‌ஷியா, சீனா, இங்கிலாந்து, பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி ஆகிய 6 வல்லரசு நாடுகள் கடந்த 2015ம் ஆண்டு ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்தின.

அணுசக்தி ஒப்பந்தம் என்று அழைக்கப்பட்ட இந்த ஒப்பந்தத்தின்படி ஈரான் தனது அணு ஆயுத கையிருப்பை படிப்படியாக குறைக்க வேண்டும். அதற்கு பிரதிபலனாக அந்த நாட்டின் மீது விதித்த பொருளாதாரத் தடைகளை மேற்கூறிய வல்லரசு நாடுகள் திரும்பப்பெற வேண்டும்.

ஈரானுடனான இந்த அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கடந்தாண்டு அறிவித்தார். மேலும் ஈரான் மீது பல்வேறு பொருளாதார தடைகளை விதித்தார்.

இதன்காரணமாக ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே மோதல் வெடித்தது. அதனை தொடர்ந்து அணுசக்தி ஒப்பந்தத்தின் நிபந்தனைகளை புறக்கணிப்பதாக ஈரான் படிப்படியாக அறிவித்து வந்தது. அதன்படி அணுசக்தி ஒப்பந்தத்தின் 5 நிபந்தனைகளில் 4 நிபந்தனைகளை ஈரான் நிராகரித்தது.

இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள சர்வதேச விமான நிலையம் அருகே அமெரிக்க ராணுவம் நடத்திய வான்தாக்குதலில் ஈரான் ராணுவ தளபதி காசிம் சுலைமானி கொல்லப்பட்டார். இதனால் இருநாடுகளுக்கு இடையிலான மோதல் வலுவடைந்து போர் பதற்றம் அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் அணுசக்தி ஒப்பந்தத்தை முழுமையாக ரத்து செய்துவிட்டதாக ஈரான் அறிவித்துள்ளது. தலைநகர் டெஹ்ரானில் நடந்த மந்திரிசபை கூட்டத்திற்குப்பின் இந்த அறிவிப்பை ஈரான் அரசு வெளியிட்டுள்ளது.

இது குறித்து அந்த நாட்டு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக 2015ம் ஆண்டு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளுக்கு இனி கீழ்ப்படியப்போவதில்லை.

அணுசக்தி ஒப்பந்தத்தின் எந்தவொரு நிபந்தனையையும் ஈரான் இனி பின்பற்ற தேவையில்லை. அந்த ஒப்பந்தம் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது. இனிமேல், ஈரானின் அணுசக்தி திட்டம் அதன் சொந்த தொழில்நுட்ப தேவைகளின் அடிப்படையில் முன்னேறும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

அதே சமயம் பொருளாதார தடைகள் நீக்கப்பட்டால் அணுசக்தி ஒப்பந்தத்தை மீண்டும் ஏற்றுக்கொள்ள தயாராக இருப்பதாக ஈரான் அரசு தெரிவித்துள்ளது.

இதற்கிடையே ஈரானின் இந்த முடிவு குறித்து அணுசக்தி ஒப்பந்தத்தின் உறுப்பு நாடுகளான இங்கிலாந்து, பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி கவலை தெரிவித்துள்ளன.

இது குறித்து ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல், இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் மற்றும் பிரான்ஸ் அதிபர் மெக்ரான் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறும் அனைத்து நடவடிக்கைகளையும் ஈரான் திரும்பப்பெற வேண்டுமென வலியுறுத்தி உள்ளனர். மேலும் மத்திய கிழக்கு பகுதியில் நீடிக்கும் பதற்றத்தை தணிக்க தங்களால் இயன்றதை செய்வோம் என அவர்கள் உறுதிபூண்டு உள்ளனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply