தமிழ் மக்களை ஏமாற்றியதற்காக சொகுசு வீடொன்றை பெற்றுக்கொண்டார் சம்பந்தன்?

நல்லாட்சி அரசாங்கத்தில் அரசியல் தேவைக்காகவே நீதித்துறை இயங்கிவந்துள்ளது என்பது நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் தொலைபேசி கலந்துரையாடலில் தற்போது உறுதியாகியுள்ளதாக அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

அத்துடன், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தமிழ் மக்களுக்கான பிரச்சினைகளுக்கு தீர்வை பெறாவிட்டாலும் அவர் நிரந்தர சொகுசு இல்லமொன்றை அரசாங்கத்திடமிருந்து பெற்றுக்கொண்டதாகவும் விமல் வீரவன்ச விமர்சனம் வெளியிட்டுள்ளார்.

நாடாளுமன்றில் இன்று இடம்பெற்ற அமர்வில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்,

“தமிழ் மக்களுக்கு எதனையும் செய்யாத கடந்த அரசாங்கம், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு வீடொன்றையேனும் வழங்கியுள்ளமையை இட்டு நாம் மகிழ்ச்சியடைகிறோம்.

ஐக்கிய தேசியக் கட்சியானது, கடந்த காலங்களில் பிரிவினைவாதிகளின் கொள்கைகளுக்கு இணங்கவே அரசாங்கத்தை நடத்திவந்தது. தற்போது அந்த அரசாங்கத்தின் அனைத்து உண்மைகளும் வெளிவந்துக்கொண்டிருக்கின்றன.

ரஞ்சன் ராமநாயக்கவின் குரல் பதிவுகளின் ஊடாக அனைத்தும் வந்துக்கொண்டிருக்கின்றன. இதற்குதான் கர்மா என்று கூறுவது. அவர் நீதிபதிகளுக்கு அழுத்தம் விடுக்கிறார். சி.ஐ.டியின் பிரதானிகளுக்கு அழுத்தம் விடுக்கிறார்.

எமது தரப்பினரை கைது செய்யுமாறு கூறுகிறார். அத்தோடு, சஜித் பிரேமதாஸவுக்கு மூளை இல்லை என்றும் தெரிவிக்கிறார். முற்றுமுழுதாக இவர்களின் தேவைக்கு இணங்கத்தான் நீதித்துறை கடந்த காலங்களில் செயற்பட்டுள்ளது.

நீதித்துறை மீதான நம்பிக்கை மக்கள் மத்தியில் இல்லாது போயுள்ளது. இவை எல்லாம் மிகவும் கேவலமாகும். செய்யும் தவறுகள் எல்லாம் செய்துவிட்டு, தற்போது இறுவட்டில் உள்ள குரல் பதிவுகள் சட்டவிரோதமாக வெளிவந்துள்ளதாக எதிர்த்தரப்பினர் கூறிவருகிறார்கள்.

மேலும், இவை அனைத்தும் அரசியல் பழிவாங்கல் என எதிர்க்கட்சித் தலைவர் இன்னமும் கூறிவருகிறார். வெட்கமில்லையா என நான் இவர்களிடம் கேட்க விரும்புகிறேன். பொலிஸிடம் உள்ள எந்தக் குரல் பதிவும் வெளியாகவில்லை.

மாறாக, ரஞ்சன் ராமநாயக்கவினால்தான் இந்த குரல் பதிவுகள் வேறு வழியில் இன்று வெளியாகியுள்ளன. இதுதொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என நாமும் வலியுறுத்துகிறோம்” என அவர் மேலும் கூறியுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply