பாக்தாத் அமெரிக்க தூதரகம் மீது ராக்கெட் தாக்குதல்

ஈரான் நாட்டை சேர்ந்த புரட்சிப்படை தலைவர் சுலைமானியை கடந்த வெள்ளிக்கிழமை அமெரிக்கா ஏவுகணை வீசி கொன்றதால் வளைகுடா பகுதியில் பதட்டம் ஏற்பட்டுள்ளது.

சுலைமானி கொல்லப்பட்டதற்கு பழிக்குப்பழி வாங்கும் நடவடிக்கையாக நேற்று அதிகாலை ஈராக்கில் உள்ள 2 அமெரிக்கா விமானப்படை தளங்கள் மீதும் ஈரான் அதிரடி தாக்குதல் நடத்தியது. அடுத்தடுத்து 22 ஏவுகணைகளை செலுத்தி இந்த தாக்குதலை ஈரான் மேற்கொண்டது.

ஈரான் அரசு தொலைக்காட்சி இது தொடர்பாக கூறுகையில், “80 அமெரிக்க பயங்கரவாதிகளை (ராணுவ வீரர்கள்) கொன்று விட்டோம்” என்று கூறியது. ஆனால் 80 பேர் கொல்லப்பட்டதற்கான ஆதாரம் எதையும் ஈரான் வெளியிடவில்லை. அமெரிக்கா தரப்பில் தங்களுக்கு எந்தவித உயிர்ச்சேதமும் ஏற்படவில்லை என்று கூறப்பட்டுள்ளது.

22 ஏவுகணைகள் 2 விமான தளங்கள் மீது பாய்ந்ததால் அமெரிக்காவின் போர் ஹெலிகாப்டர்கள், சிறிய ரக விமானங்கள் கடுமையாக சேதம் அடைந்து இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இந்த சேதங்கள் பற்றி அமெரிக்கா ஆய்வு செய்து வருகிறது. அந்த ஆய்வு முடிந்த பிறகு ஈரான் தாக்குதலால் அமெரிக்காவுக்கு ஏற்பட்ட இழப்புகள் பற்றி முழுமையாக தெரிய வரும்.

இந்த நிலையில் ஏவுகணை தாக்குதல் நடந்த அடுத்த 24 மணி நேரத்துக்குள் மீண்டும் அமெரிக்க நிலைகள் தாக்கப்பட்டுள்ளன. நேற்று இரவு 2 ராக்கெட்டுகள் ஈராக் தலைநகர் பாக்தாத் நோக்கி வீசப்பட்டன.

அந்த 2 ராக்கெட்டுக்களும் பாக்தாத்தில் அதிக பாதுகாப்புக் கொண்ட “கிரீன் ஜோன்” எனும் இடத்தை தாக்கின. அந்த கிரீன் ஜோன் பகுதியில்தான் அமெரிக்கா நாட்டு தூதரகம் உள்பட பல்வேறு நாடுகளின் தூதரக அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன.

கிரீன் ஜோன் பகுதியில் மற்றொரு இடத்தில் அமெரிக்காவின் ஏவுகணை தளம் இருக்கிறது. அந்த ஏவுகணை தளத்தையும், அமெரிக்க தூதரகத்தையும் குறி வைத்து ராக்கெட் தாக்குதல் நடந்து இருப்பது தெரிய வந்துள்ளது. பாக்தாத் கிரீன்ஜோனில் 2 ராக்கெட்டுக்களும் மோதி வெடித்ததும் பயங்கர தீ பரவியது.

அப்போது ஏற்பட்ட வெடி சத்தம் பாக்தாத் நகரை குலுக்கும் வகையில் இருந்ததாக அங்குள்ள வெளிநாட்டு செய்தியாளர்கள் தெரிவித்தனர். பாக்தாத்தில் உள்ள ரகசிய இடம் ஒன்றில் இருந்து இந்த 2 ராக்கெட்டுக்களும் ஏவப்பட்டிருந்தன. இந்த ராக்கெட் தாக்குதலில் எத்தகைய சேதம் ஏற்பட்டது என்பது தெரியவில்லை.

ஆனால் ராக்கெட் தாக்குதல் நடந்த காட்சிகளை ஈரான் அரசு தொலைக்காட்சியான பிரஸ் டி.வி. வெளியிட்டுள்ளது.

இதற்கிடையே ராக்கெட் தாக்குதல் நடத்தியது ஈராக்கில் செயல்பட்டு வரும் ஹர்கத் அல் நுஜ்பா எனும் அமைப்பு என்று தெரியவந்துள்ளது. இந்த அமைப்பு நேற்று அமெரிக்க படைகளுக்கு திடீர் எச்சரிக்கை விடுத்து இருந்தது.

அந்த எச்சரிக்கை செய்தியில், “அமெரிக்க வீரர்களே உங்கள் கண்களை மூடாதீர்கள். பழி வாங்கும் நடவடிக்கையை நாங்கள் தொடங்கி விட்டோம். இந்த மண்ணில் இருந்து கடைசி அமெரிக்கர் புறப்பட்டு செல்லும் வரை தாக்குதல் நடத்தப்படும்” என்று கூறி இருந்தது.

அந்த அமைப்புதான் 2 ராக்கெட் தாக்குதல்களை நடத்தி இருப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. ஹர்கத் அல் நுஜ்பா அமைப்பு ஈரான் ஆதரவு அமைப்பு என்பது குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply