தமிழ் ஜனநாயக தேசியக் கூட்டமைப்புடன் தமிழ் கூட்டமைப்பு பேச்சு
யாழ் மாநகரசபை மற்றும் வவுனியா நகரசபைக்கான தேர்தல்கள் நடைபெறவுள்ள நிலையில் தமிழர் விடுதலைக் கூட்டணி, புளொட் மற்றும் ஈ.பி.ஆர்.எல்.எப். (பத்மநாபா அணி) ஆகிய கட்சிகளுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (TNA) உத்தியோக பூர்வமற்ற பேச்சுக்களை நடத்தியுள்ளது. இனப்பிரச்சினைக்குப் பொதுவான தீர்வொன்றை எட்டுவது தொடர்பாகத் தமிழர் விடுதலைக் கூட்டணி, புளொட் மற்றும் ஈ.பி.ஆர்.எல்.எப்.(பத்மநாபா அணி) ஆகிய கட்சிகள் இணைந்து உருவாக்கியிருக்கும் தமிழ் ஜனநாயக தேசியக் கூட்டமைப்புடன் (TDNA) தாம் ஏற்கனவே உத்தியோகபூர்வமற்ற பேச்சுக்களை நடத்தியிருப்பதாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிறிகாந்தா கொழும்பு வாரப் பத்திரிகையொன்றிடம் தெரிவித்தார்.
எனினும், வடபகுதியில் நடைபெறவிருக்கும் தேர்தலை இலக்காகக் கொண்டு இந்தப் பேச்சுக்கள் நடத்தப்படவில்லையென அவர் கூறினார்.
தற்பொழுது இந்தியா சென்றிருக்கும் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தனும், ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்கள் இருவரும் நாடு திரும்பியதும் இந்த விடயம் தொடர்பாகக் கலந்துரையாடித் தீர்மானமொன்றெடுக்கப்படுமென சிறிகாந்தா அந்தப் பத்திரிகைக்குத் தெரிவித்தார்.
எனினும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் எந்தவிதமான தொடர்புகளையும் பேணுவதற்கு விரும்பவில்லையெனத் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவரும், ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயலாளருமான வி.ஆனந்தசங்கரி அந்தப் பத்திரிகையிடம் கூறியுள்ளார்.
“அவர்களுடன் எந்தவிதமான செயற்பாடுகளையும் வைத்துக்கொள்ள நான் விரும்பவில்லை. அவர்களுடன் இணைந்து எதனையும் செய்வதைவிட அரசியலிலிருந்து விலகுவது மேல்” என அவர் தெரிவித்துள்ளார்.
பொதுமக்களை விடுதலைப் புலிகள் கேடயங்களாகத் தடுத்துவைத்திருக்கும்போது விடுவிக்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை விடுக்கவில்லையெனவும், இதனால்தான் தற்பொழுது 10 வயதுச் சிறுவர்களும் குற்றவாளிகள் போல கைவிரல் அடையாளங்களை வழங்கவேண்டியேற்பட்டிருப்பதாகவும் கூறினார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply