முகாம்களிலுள்ள வங்கிகளில் 2 நாட்களில் 390 மில்லியன் ரூபா வைப்பு
வன்னியிலிருந்து இடம் பெயர்ந்த மக்கள் தங்க வைக்கப்பட்டிருக்கும் நலன்புரி நிலையங்களில் அமைக்கப் பட்டிருக்கும் நடமாடும் வங்கிகளில் இதுவரை 390 மில்லியன் ரூபா வைப்பிலிடப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இடம் பெயர்ந்த மக்கள் பணம் மற்றும் தங்க நகைகளைப் பொட்டணிகளாகக் கட்டி இடம் பெயரும் போது அவற்றைத் தம்முடன் எடுத்து வந்து தற்பொழுது வங்கிகளில் வைப்பிலிட்டிருப்பதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
நலன்புரி நிலையங்களில் இலங்கை வங்கி மற்றும் மக்கள் வங்கி ஆகிய இரண்டு வங்கிகளும் நடமாடும் சேவைகளை ஆரம்பித்துள்ளன. இவ்வங்கிகள் திறக்கப்பட்டு 2 நாட்களில் 390 மில்லியன் ரூபா வைப்பிலிடப்பட்டிருப்பதாக நலன்புரி நிலையங்களிலுள்ள வங்கி வசதிகளை ஆராயச் சென்றிருந்த மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் கூறினார்.
“இதனைவிட மேலதிகமாக மக்களிடம் பணம் இருக்கும். இடம்பெயர்ந்த மக்கள் தமது பெறுமதிவாய்ந்த நகைகள் மற்றும் பணத்தைத் துணிகள் மற்றும் பைகளில் சுற்றியபடி எடுத்துவந்துள்ளனர். இந்த வங்கிகள் வெளிநாட்டிலிருந்து வரும் பணத்தைப் பெற்று நலன்புரி நிலையங்களிலுள்ள மக்களுக்கு வழங்கவும் நடவடிக்கை எடுக்கும். நலன்புரி நிலையங்களிலிருக்கும் மக்களுக்காக வெளிநாடுகளிலிருந்து அனுப்பப்பட்ட பணமும் இந்த 390 மில்லியன் ரூபாவில் அடங்குகிறது” என அவர் குறிப்பிட்டார்ட.
அதேநேரம், புதுமாத்தளன் பகுதியிலிருந்து இடம்பெயர்ந்த மக்கள் களப்புக்கடல் பகுதியூடாகப் பயணித்து வந்தமையால் நலன்புரி நிலையத்திலுள்ள மக்கள் சிலர் பணத்தை உலரவைப்பதைக் காணக்கூடியதாவிருந்தது என முன்பு செய்திகள் வெளியாகியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply