தமிழ்த் தேசியக் கூட்டமைபின் சார்பில் யாழ் மாநகரசபை முதன்மை வேட்பாளர் புளொட் அமைப்பின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன்?

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் சார்ப்பில் யாழ் மாநகரசபை முதல்வர் வேட்பாளராக புளொட் அமைப்பின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தனை நியமிப்பது தொடர்பாக ஆராயப்பட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழர் விடுதலைக் கூட்டணி, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எப். ஆகிய கட்சிகள் இணைந்து உருவாக்கியிருக்கும் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சியுடன் இணைந்து யாழ் மாநகரசபை மற்றும் வவுனியா நகரசபைகளுக்கான தேர்தலில் போட்டியிடுவது பற்றித் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உத்தியோகபூர்வமற்ற முறையில் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இணைந்து கூட்டணியொன்றை அமைக்குமாயின் யாழ் மாநகரசபைக்கான முதல்வர் வேட்பாளராக சித்தார்த்தன் நிறுத்தப்படுவார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

எனினும், இந்த விடயம் தொடர்பாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இதுவரை எந்தவிதமான இறுதிமுடிவும் எடுக்கவில்லையெனத் தெரியவருகிறது. தற்பொழுது இந்தியாவிலிருக்கும் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான இரா.சம்பந்தன், மாவை சேனாதிராஜா, சுரேஷ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் நாடு திரும்பிய பின்னரே இறுதி முடிவு எடுக்கப்படும் எனக் கூறப்படுகிறது.

எதிர்வரும் 9ஆம் திகதிக்கு பின்னர் இறுதித் தீர்மானம் எடுக்கப்படுமெனக் கூட்டமைப்பு வட்டாரங்கள் தெரிவித்தன. இடம்பெயர்ந்த மக்கள் முகாம்களில் தங்கியிருக்கும் நிலையில், தற்போது தேர்தல்களை நடத்துவது குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்னர் அதிருப்தி வெளியிட்டிருந்ததுடன், இந்தத் தேர்தல்களை ஒத்திவைக்கவேண்டுமெனவும் கோரிக்கை விடுத்திருந்தது.

இதேவேளை, யுத்தம் முடிவுக்கு வந்திருக்கும் நிலையில், யாழ் மாநகரசபை மற்றும் வவுனியா நகரசபைக்குமான தேர்தல்களை நடத்துவதற்கான வேட்புமனுக் கோரல் எதிர்வரும் 17ஆம் திகதி முதல் 24ஆம் திகதி வரை நடைபெறுமெனத் தேர்தல்கள் திணைக்களம் அறிவித்துள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply