வன்னி மோதல்களில் பாதுகாப்புத் தரப்பில் கடும் இழப்பு: கொழும்பு ஊடகம்

கிளிநொச்சி தெற்கு மாங்குளம் மற்றும் முகமாலைப் பகுதிகளில் கடந்த மூன்று நாட்களாக இடம்பெற்ற கடும் மோதல்களில் இராணுவத் தரப்பில் பாரிய இழப்புக்கள் ஏற்பட்டிருப்பதாக கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. 
 
வன்னியை நோக்கி முன்னேறிவரும் அரசாங்கப் படைகள் மீது விடுதலைப் புலிகள் கடுமையான பதில் தாக்குதல்களை நடத்தி வருவதாகவும், விடுதலைப் புலிகளின் தகவல்களுக்கமைய 46 இராணுவத்தினர் கொல்லப்பட்டதுடன், 100ற்கும் அதிகமானவர்கள் காயமடைந்திருப்பதாகவும் அந்த ஊடகச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. இம்மாதம் 15ஆம், 16ஆம் திகதிகளில் 38 இராணுவத்தினரும், 17ஆம் திகதி மேலும் எட்டுப் பேரும் கொல்லப்பட்டதாக அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், மாங்குளம் மற்றும் முகமாலை முன்னரங்கப் பகுதியில் இடம்பெற்ற மோதல்களிலும் இழப்புக்கள் ஏற்பட்டிருப்பதாகச் சுட்டிக்காட்டியிருக்கும் அந்த ஊடகம், எனினும், பாரிய இழப்புக்கள் ஏற்பட்டிருப்பாக வெளியாகியிருக்கும் தகவல்களை தேசிய பாதுகாப்பு ஊடக நிலையம் மறுத்திருப்பதாகத் தெரிவித்துள்ளது.

இதேவேளை, வன்னி மோதல்களில் ஏற்படும் இழப்புக்கள் குறித்த தகவல்களை வெளியிடுவதில்லையென்பது பாதுகாப்பு அமைச்சின் கொள்கை என தேசிய பாதுகாப்பு ஊடக நிலையத்தின் பணிப்பாளர் குலுகல்ல அந்த ஊடகத்திடம் கூறியுள்ளார்.

வழமைக்கு மாறாக நேற்றையதினம் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட இராணுவத்தினரின் எண்ணிக்கை கூடுதலாக இருந்ததாக சிறி ஜெயவர்த்தனபுர வைத்தியசாலை வட்டாரத் தகவல்களை மேற்கோள்காட்டி அந்த ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
 
கடந்த மூன்று நாட்களில் வன்னியில் 200ற்கும் அதிகமான இராணுவத்தினர் கொல்லப்பட்டதுடன், 300 பேர் காயமடைந்திருப்பதாக   குறிப்பிடப்பட்டுள்ளது.

பூநகரியை வெற்றிபெற்றிருக்கும் இராணுவத்தினர் தற்பொழுது முகமாலையிலிருந்து ஆணையிறவை நோக்கி முன்னேறி வருவதுடன், பரந்தன் பகுதியையும் நோக்கி முன்னேறி வருவதாகவும், அவர்கள் விடுதலைப் புலிகளின் கடுமையான பதில் தாக்குதல்களை எதிர்கொண்டிருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சு தகவல் வெளியிட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply